பச்சை அலங்காரத்தில் பவனிவந்த யாழ் நல்லூர் கந்தன்!
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் திருவிழாவான நேற்று ஆறுமுக சுவாமி பச்சை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்காட்சி அளித்தார்.
நாட்டை அச்சுறுத்தும் கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்த மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகின்றன.
அதன்படி, நேற்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார். தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய், சிறிய தேரில் ஆரோகணித்து, உள்வீதியுலா வந்தார்.
பின்னர் மீண்டும் ஆறுமுக சுவாமி பச்சை அலங்காரத்தில் (பச்சை சாற்றால்) பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். இம்முறை தேர் திருவிழாவின்போது ஆலயத்தின் சித்திர தேர் இழுக்காது, வேல் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து வலம் வந்திருந்தார்.
இந்நிலையில் இன்றுகாலை தீர்த்தோற்சபம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


