அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல ;விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ அட்வைஸ்!
சினிமாவில் பிரபல நடிகராகப் புகழ்பெற்று இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய், 2024 பெப்ரவரி 2-ஆம் திகதி அரசியலில் அதிகாரப்பூர்வமாகக் களமிறங்கி, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தற்போது அவர் தீவிர பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் இன்னும் முழுமையாக பக்குவம் அடையவில்லை
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்க்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அரசியல் தொடர்பான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா டுடே ஊடகத்திற்கு நாமல் ராஜபக்ஷ அளித்த பிரத்யேக பேட்டியில், விஜய் குறித்து கருத்து தெரிவித்தார்.

“விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவரது சினிமா பயணத்தை கவனித்து வருகிறேன். ஆனால், ஒரு அரசியல்வாதியாக அவர் இன்னும் முழுமையாக பக்குவம் அடையவில்லை.
விஜய் அரசியலில் நுழைந்தது, எல்லைகளைத் தாண்டி கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், அதன் நம்பகத்தன்மை அவரது செயல்பாடுகளில்தான் வெளிப்படும்.
அவரது வருகை தமிழக அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், பொதுப் பிரச்னைகள் சினிமா கதைகளைவிட மிகவும் சிக்கலானவை. அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல
அது ஒரு முழுநேர பொறுப்பு. மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும், அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. விஜய் அரசியலை மிகவும் தீவிரமாக அணுக வேண்டும்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் உண்மையில் நிறைவேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நிஜ வாழ்க்கை சிக்கல்கள், திரையில் காட்டப்படுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. அரசியல் சினிமாவைவிட மிக அதிகமாக உணர்திறன் கொண்டது என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.