இரவு நேரத்தில் மர்ம கடத்தல் ; சவாரிக்குச் சென்ற சாரதி மீது தாக்குதல்
திருகோணமலை மூதூர் தக்வா நகர் பகுதியில் உள்ள பெந்திஸ் அடி என அழைக்கப்படும் கடற்கரைப் பகுதியில், பச்சை நிற முச்சக்கரவண்டியொன்று நள்ளிரவு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த மீனவர்கள், உடனடியாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் போது, திருகோணமலையைச் சேர்ந்த ஓட்டுநருக்குச் சொந்தமான இந்த முச்சக்கரவண்டி, இரவு வேளையில் சவாரிக்காக மூவரை ஏற்றிச் சென்றபோது கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தம்பலகாமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, இடைநடுவில் மர்ம பயணிகள் சாரதியைத் தாக்கி வயல் பகுதியில் வீசிவிட்டு, முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மீட்கப்பட்ட முச்சக்கரவண்டியில் சாரதியின் அனுமதிப்பத்திரம் மற்றும் சில பணத்தாள்கள் காணப்பட்டதாகவும், வேறு எந்த சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.