மியான்மார் அகதிகள் இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைப்பு
திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் மிரிஹானை இடைத்தங்கல் முகாமிற்கு இன்று (23) மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் ரோஹிங்யா அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் அன்றைய தினம் மாலை குறித்த பயணிகள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், ஏனைய 103 பயணிகளும் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அகதிகளை மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்க வைப்பதற்காக கடந்த சனிக்கிழமை (21) அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்காததால் அவர்கள் மீள திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் இன்று மிரிஹானைக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளனர்.