மியன்மார் நில அதிர்வு; தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வில் இதுவரை சுமார் 163 பேர் உயிரிழந்ததாகவும், 732 பேர் காயமடைந்துள்ளதாகவும் மியன்மாரின் இராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐயம் நிலவுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த நிலநடுக்கம் தாய்லாந்தையும் தாக்கியதால் தலைநகர் பெங்கொக்கில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்தில் நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த நாட்டு நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரில் நில அதிர்வில் சிக்குண்டு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவும் வகையில் இரத்த தானம் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.