வெளிநாட்டில் இருந்து வந்தவரின் பணத்தை திருடி காதலிக்கு கொடுத்த சாரதி!
துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடி காதலியிடம் கொடுத்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை (29) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
தவறுதலாக வாடகை வாகனத்தில் விட்டுச் சென்ற கைப்பை
குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை தவறுதலாக வாடகை வாகனத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.
இதனையடுத்து வாடகை வாகனத்தின் சாரதியிடம் விசாரித்தபோது, அந்த கைப்பை தனது காரில் இருப்பதாகவும், அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து இன்று (31) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று சாரதியிடம் இருந்து தனது மடிக்கணினி அடங்கிய கைப்பையை பெற்றுக்கொண்டு அதனை சோதனையிட்ட போது கைப்பையிலிருந்த 904,400 ரூபா பணம் காணாமல்போயிருப்பதை அறிந்துள்ளார்.
அது தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தை அடுத்து சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பணம் வாடகை வாகன சாரதியின் காதலியிடம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரான வாடகை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.