மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேட்பன்: ரோகித் சர்மா குறித்து மஹேல ஜெயவர்த்தனே வெளியிட்ட தகவல்!
எதிர்வரும் (2024) மார்ச் மாதம் தொடங்கவுள்ள 2024 ஐபிஎல் சீசனுக்கான தனது புதிய கேப்டனை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.
இதன் மூலம் ரோகித் சர்மா தனது தலைமை பதவியிலருந்து விலகுவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் என்றால், ஒன்று மும்பை இந்தியன்ஸ் மற்றொன்று சென்னை சூப்பர் கிங்ஸ் தான்.
குறித்த இரண்டு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளன. மும்பை அணியின் ஃபேவரைட் ஆன கேப்டன் என்றால் அது ரோஹித் சர்மாதான்.
இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜஸ் அணிக்காக அறிமுகமானார்.
பின்னர் 2011ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. அன்று முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏறுமுகம் தான்.
இவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மும்பை இந்தியன்ஸ் புதிய கேட்பன்
இவர் கேப்டனான பிறகுதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் கூடியது எனவும் கூறலாம்.
இதனால்தான் இந்திய அணி நிர்வாகமும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்தது.
இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ரோகித் சர்மா, அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி பரவலாகியது.
அந்த செய்தி பொய்யாக இருக்க கூடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை அண்மையில் குஜராத் அணியிலிருந்து ஏலத்தில் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
மஹேல ஜெயவர்த்தனே விளக்கம்
இந்த மாற்றம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் கேட்பனும், தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்த்தனே கூறுகையில்,
” இது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் தனது திட்டங்களில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்து வருகிறது.
சச்சின் முதல் ஹார்பஜன் சிங் வரையிலும், ரிக்கி பாண்டிங் முதல் ரோகித் சர்மா வரை வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட அணி.
அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகளை குவிக்கவும் அதே வேளையில் எதிர்காலத்துக்கான அணியை பலப்படுத்தவும் ரோகித் சர்மா இந்த முடிவை எடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது பதவிக்காலம் சாதாரணமானது அல்ல. இந்த வெற்றிகரமான கேப்டனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் அவரது பெயர் என்றும் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.
தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹார்திக் பாண்டியா, இவரது தலைமையில் 2022ஆம் ஆண்டு குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.