கிளிநொச்சியில் பல மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியின் தற்போதைய நிலை!
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் ஸ்கந்தபுரம் முட்கொம்பன் பிரதான வீதி பல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் முடியும் முன்னரே வீதி முற்றாக தேசமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீதியால் சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் தற்போது காணப்படுவவதாகவும் பொது மக்கள் கூறியுள்ளனர்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வீதியானது பிரதேச மக்களின் நீண்டகால கோரிக்கை்கு அமைவாக முதற்தடவையாக காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரதேச மக்களின் மகிழ்ச்சி மூன்று வருடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. காரணம் குறித்த வீதி பல இடங்களில் மிக மோசமாக சேதமடைந்துள்ளதுடன், வீதியின் பல இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு அப் பகுதிகளும் சேதமடையும் நிலையில் உள்ளது.
அபிவிருத்தியின் போது குறிப்பிட்டப்பட்ட நியமங்களுக்கு அமைவாக தரமான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படாமையும் அபிவிருத்திப் பணிகளை கண்காணிக்க வேண்டிய அரச திணைக்களங்கள் உரிய முறையில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமையுமே வீதியின் இன்றைய நிலைக்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

