சிறைச்சாலையிலிருந்து இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பு அம்பலம்
பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் இருந்து வழிநடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பற்றிய தகவல்களைக் கிரிபத்கொட காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது.
காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிரிபத்கொடவிலுள்ள ஓர் உணவகத்தில் ஹெரோயின் வைத்திருந்த ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது விசாரணைகளின் மூலம், சிறைச்சாலையில் உள்ள அமல் ராஜ் என்பவரே தொலைபேசி மூலம் இந்த போதைப்பொருள் கடத்தலை இயக்கி வருகிறார் என்பது தெரியவந்தது.

அமல் ராஜ், வட்ஸ்அப் (WhatsApp) மூலமாகத் தனது சகாக்களுடன் தொடர்பில் இருந்துள்ளதை காவல்துறை கண்டுபிடித்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணைக் கொண்டே அமல் ராஜுக்குத் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, "பெரிய சரக்கில் 25 கிராம் வேண்டும்" என்று அந்தப் பெண் கேட்டபோது, கொட்டாஞ்சேனை பகுதிக்கு வந்து மீண்டும் அழைக்குமாறு அமல் ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் அந்தத் தம்பதியினரையும் முச்சக்கர வண்டியில் அழைத்துக் கொண்டு கொட்டாஞ்சேனைக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து மீண்டும் அமல் ராஜைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் புகைப்படங்களை வட்ஸ்அப்பில் அனுப்புமாறு அமல் ராஜ் கோரியுள்ளார்.
அந்தப் புகைப்படங்களை அனுப்பிய பின்னர், அந்த இடத்திற்கு வந்த நபர் ஒருவர், குறித்த போதைப்பொருளை உளவுத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அதன்போது விரைந்து செயற்பட்ட காவல்துறை, அந்த ஹெரோயினுடன் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்தது.
ஸ்டீவன் ராஜ் என அடையாளம் காணப்பட்ட அந்தக் நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அவர் ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5,400 வெளிநாட்டு சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதே வீட்டில் இருந்து 68,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் 4 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டதற்கான பற்றுச்சீட்டுகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.