முல்லேரியா துப்பாக்கி சூட்டு சம்பவம்; விசாரணைகளில் வெளிவந்த தகவல்
கொழும்பு முல்லேரியா – தெல்கஹவத்த பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளர் எனக் கூறப்படும் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோரால் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொலையாளிகள் என நம்பப்படும் இருவர் நேற்று அதிகாலை முல்லேரியா – தெல்கஹவத்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்கள் தமது மோட்டார் சைக்கிளை பிரதேசத்தின் விஹாரை ஒன்றுக்கு அருகே நிறுத்தி வைத்து விட்டு குறித்த வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அதோ சந்தேக நபர்கள் தங்களை பொலிஸார் என கூறியே அவர்கள் கதவை தட்டிய நிலையில் வீட்டார் கதவை திறந்தபோதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எனினும் இந்த சம்பவம் தொடர்பில் கொலையாளிகள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான பிரச்சினை சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்ய, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், மிரிஹான விசேட குற்றத் தடுப்புப் பிரிவு, கொழும்பு தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 4 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி