முல்லைத்தீவு தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
இலங்கைத்தீவின் தான்தோன்றீஸ்வரத் தலங்களில் ஒன்றாக விளங்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மஹோற்சவம் இன்று (14) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
16 நாட்கள் நடைபெறவுள்ள இம்மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழாவிற்கான கொடிச்சீலை, கற்சிலைமடு பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதம குருவான சிவாகம ரத்தினம் சிவஸ்ரீ ரஞ்சித கீர்த்திவாசக்குருக்கள் தலைமையில் ஏனைய குருமார்களின் வேத பாராயணங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் ஆரோகர கோசத்துடன் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வரர் எழுந்தருளி வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்ததுடன், விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
மஹோற்சவ நிகழ்வுகளின் ஒரு பகுதியாக எதிர்வரும் 26ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும், 27ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 28ஆம் திகதி இரதோற்சவமும், 29ஆம் திகதி தீர்த்தோற்சவம் மற்றும் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.