முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் கடற் பகுதி அபகரிப்பு தொடர்பில் மக்களின் கருத்து!
முல்லைத்தீவு- கரைத்துறை பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்குழாய் வடக்குக்கும் நாயாறுக்கும் இடைப்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியின் தரை மற்றும் கடற்பகுதிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம் பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தென் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் நான்கு வாடிகளை சட்டவிரோதமான முறையில் அமைத்து புலி பாய்ந்தகல் கடற்பரப்பை முற்றுமுழுதாக அபகரிக்கும் நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைக்கப்பட்ட சுமார் நான்கு வாடிகளிலும் சுமார் 16 பேர் வரை தங்கி அன்று தொழில் செய்து வரும் நிலையில் குறித்த வாடிகளில் மது விருந்துகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்களும் காணப்படுகிறது.
தெற்கைச் சேர்ந்தவர்களை குடியமர்த்துவதற்காகான ஏற்பாடுகள்
முல்லைத்தீவை பூர்விகமாக கொண்ட மீனவர்கள் பூர்விகத் தொழில் செய்து வரும் கடற் பகுதியும் அதனோடு சேர்ந்த சுமார் 100 ஏக்கர் காணியையும் தெற்கைச் சேர்ந்தவர்களை குடியமர்த்துவதற்காகான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன் பின்புலத்தில் பெளத்த மதத் தலைவர் ஒருவரின் கண்காணிப்பில் மக்களை குடியேற்றுவதற்கான திட்டங்கள் முழு வீச்சில் இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மீனவர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
தமது பாரம்பரிய கடல் பகுதி பறிக்கப்பட்டு தெற்கு மீனவர்களை அடாத்தாக தமது கடற் பகுதிக்குள் அனுமதித்து நிரந்தரமாக குடியேற்றங்களை அமைக்கும் திட்டம் தீட்டப்படுகிறது.
தமிழர் பகுதியான வெலி ஓயாப் பகுதி சிங்கள மயமாக்கப்பட்டுள்ள நிலையில் அப் பகுதியில் உள்ள சுமார் 06 இற்கு மேற்பட்ட குளங்களில் தமிழ் மீனவர்கள் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர் .
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் வெலி ஓயாப் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்பை மீறி பெரும்பான்மை இனத்தவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது.
குறித்த பகுதில் காணப்படும் வளங்கள்
குறித்த பகுதியில் வளமான சுமார் ஆறு நன்னீர் குளங்கள் காணப்படுகின்ற நிலையில் அதன் சூழ உள்ள பகுதிகள் ஆங்கிலேயர் காலத்து உறுதி பாத்திரங்கள் தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அப் பிரதேசத்தில் அடக்காத சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் மக்களின் பரம்பரையான நன்னீர் மீன்பிடியை இல்லாமல் ஆகிவிட்டார்கள்.
தற்போது முல்லைத்தீவு மாவட்ட மீனவ மக்களின் வாழ்வாதார தொழிலாக காணப்படும் புலிபாய்ந்த கல் பகுதியின் கடல் வளத்தையும் நில வளத்தையும் தெற்கைச் சேர்ந்தவர்களுக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு உடந்தையாக சில அதிகாரிகள் செயற்பாட்டுவருவதை அறியக்கூடியதாக உள்ளது. ஏனெனில் பரம்பரையாக தொழில் செய்து வந்த மீனவர்கள் குறித்த கடற்பகுதியில் வாடிகள் அமைப்பதற்கு உரிய அனுமதிகளை சமர்ப்பித்த போதும் அதிகாரிகள் இழுத்தாடிப்புச் செய்து வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் வாடிகளை அமைத்த தெற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒட்டப்பட்டும் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
ஆகவே புலி பாய்ந்த கல் பகுதியின் கடல் வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாப்பதற்கு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கரிசனையோடு செயல்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.