தங்கம் உற்பத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா?
ஆப்பிரிக்க நாடுகளில் நிலத்தடி தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் தங்கம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு குறித்து பார்க்கலாம்.
உலக அளவில் தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலில் சீனா நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகின் ஒட்டுமொத்த தங்க உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா மட்டுமே வழங்குகிறது.

தங்க உற்பத்தி
சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிக நெருக்கமான போட்டியில் உள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய சுரங்கங்கள் அந்நாட்டை உற்பத்தியில் முன்னணி இடத்திலேயே வைத்திருக்கின்றன.
வட அமெரிக்க கண்டத்தைப் பொறுத்தவரை, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்கா தங்கம் உற்பத்தியில் உலகிலேயே முதன்மையான நாடாகத் திகழ்ந்தது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அங்கு நிலத்தடி தங்கம் குறைந்துவிட்டதாலும், வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகரித்ததாலும் அதன் உற்பத்தி சரிவைக் கண்டுள்ளது.
தற்போது ஆப்பிரிக்க கண்டத்தில் கானா நாடு தங்க உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
தங்கம் வெட்டி எடுப்பது என்பது அந்தந்த நாடுகளின் புவியியல் அமைப்பு மட்டுமல்லாமல், அங்குள்ள தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளையும் பொறுத்தே அமைகிறது.