மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்களுக்கு ஞா. ஸ்ரீநேசன் எம்.பி. களவிஜயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களான பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள் இன்று 15.09.2026 களவிஜயம் மேற்கொண்டார்.
இதன்போது பெரிய புல்லுமலை மற்றும் கித்துள் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலை மற்றும் வீதிகளை நேரில் பார்வையிட்டார். குறித்த நிறுவனங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைத் தேவைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

பெரிய புல்லுமலை பகுதியில் போக்குவரத்தில் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரியுடன் தொடர்புகொண்டு, ஆசிரியர்கள் எதிர்நோக்கிய போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்தார்.
மேலும், பெரிய புல்லுமலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்களின் அழைப்பின் பேரில் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி, அவர்கள் எதிர்நோக்கும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

எல்லைப் பிரதேசங்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நேரில் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.