தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது
தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தல் காலங்களில் கட்சியில் இருந்து விலகாமல் விலகி போய் எதிரணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டவர்களை நீக்குவது என்பது மத்திய குழுவின் தீர்மானம்.
அது இறுதியானது. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் , ஆதரவு தெரிவித்தவர்களிடம் விளக்கமே கோரப்பட்டுள்ளது. விளக்கம் கோரப்பட்டது என்பது நீக்குவது அல்ல.
அவர்கள் பொருத்தமான விளக்கம் சொன்னால் , ஒழுக்காற்று குழு அது தொடர்பில் தீர்மானிப்பார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன் என மத்திய குழுவிடம் மிக தெளிவாக கூறி விட்டு தான் ஆதரவு தெரிவித்தார்.
அது மத்திய குழுவின் தீர்மானத்தை மீறிய செயல் தான். அதற்காக அது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று குழு முடிவெடுக்கும்.
சிறிதரனை கட்சியை விட்டு நீக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. யாரும் மத்திய குழுவில் இது தொடர்பில் பேசவும் இல்லை என தெரிவித்தார்