தாமதமாக வந்ததால் சீனா செல்லும் விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்ட Npp எம்.பி. லக்மாலி
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனாவின் ஷாங்காய் நகரை நோக்கிப் புறப்படவிருந்த China Eastern விமான சேவையின் MU 6018 விமானத்தில் பயணிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திரா தாமதமாக வந்ததால், விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீனா செல்ல அந்த விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அவர் விமான நிலையத்தை வந்தடைந்தபோது விமானம் புறப்படுவதற்கான இறுதி நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விமான சேவை ஊழியர்கள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததாக கூறப்படுகிறது.

இதன்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதைத் தெரிவித்த அவர், விமானத்தில் ஏற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், எனினும் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய ஊழியர்கள் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட சில தரப்பினரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமான உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், China Eastern விமானம் திட்டமிட்ட நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும், லக்மாலி ஹேமச்சந்திராவால் அந்த விமானத்தில் பயணிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், சம்பவத்தின் உண்மை நிலை மற்றும் விமான நிலையத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.