அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை
சவுதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜூலை முதலாம் திகதி முகப்புத்தகத்தில் வெளியிட்ட கருத்தொன்று, நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி அனோஜன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர், அந்தப் பதிவை நீக்கியதுடன், மன்னிப்பு கோரி காணொளியொன்றையும் வெளியிட்டிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி அல் அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்தது.
எனினும், செப்டம்பர் 17 ஆம் திகதி மேன்முறையீட்டில், இந்த தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நாள் முதல் ஆரம்ப தீர்ப்பு வழங்கப்படும் வரை அவருக்கு சட்டத்தரணியின் உதவி கிடைக்கவில்லை எனவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றுக்காக மரண தண்டனை விதிப்பது குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அனோஜனின் மரண தண்டனையை இரத்து செய்து, அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு சவுதி அதிகாரிகளிடம் கோரியுள்ளது.