காட்டு யானைகளின் நடமாட்டம் ; அச்சத்துடன் வாழும் பொது மக்கள்
அம்பாறை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பொது மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளான உடங்கா 02 பகுதியில் காட்டு யானை வீட்டு மதில்கள், கடை, பயன் தரும் வாழை, தென்னை மரங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
அத்துடன் சம்மாந்துறை செந்நெல் கிராமம் 01, செந்நெல் கிராமம் 02 உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் உட்புகுந்து வீட்டுத்தோட்டங்கள், வீட்டு மதில்கள், கடை அறைகள் போன்றவற்றைச் சேதப்படுத்தியுள்ளன.
மேலும் தினமும் இரவு வேளையில் காட்டு யானைகள் பொதுமக்களையும் பயன் தரும் பயிர் மற்றும் மரங்களையும் சேதப்படுத்துகின்றன.
இதனால் சம்மாந்துறை பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் தொல்லையால் அச்சமடைந்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்களின் பாதுகாப்பு, பாடசாலை மற்றும் மத்ரஸா செல்லும் மாணவர்களின் நிலை என்பன பெரும் கவலைக்குள்ளாகி இருப்பதாகவும், காட்டு யானைகளின் அட்டகாசத்தைக்கட்டுப்படுத்தி விரைவில் நிரந்தரத்தீர்வு காண வனஜீவராசி பாதுகாப்புத்திணைக்களம் மற்றும் அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை சம்மாந்துறை பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகளைக்கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி போன்ற தடுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.