இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள பொருள்
சீனாவுக்குக் கோதுமை தவிடுத் துகள்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திடவுள்ளது.
கோதுமை தயாரிப்பின்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை விதைகளில் 20 சதவீதமானவை தவிடாக அகற்றப்படுவதால், அதனை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
இதற்கமைய, இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவதற்கு வெளிவிவகார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கும் சீனாவின் சுங்கப்பொது நிர்வாகத்திற்கும் இடையில் கைச்சாத்திடுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.