நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; அதீத வேகத்தால் பறிபோன உயிர்
கொழும்பு, சீதவாக்கை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சீதவாக்கை பகுதியில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அதிக வேகத்துடன் பயணித்த போதே, கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

அவசர சிகிச்சை
இந்த விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, ஒரு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 31 வயதுடைய இளைஞர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சீதவாக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.