தனிமையில் வசித்த பெண் கைகால்கள் கட்டப்பட்டு, ஆடைகளின்றி படுகொலை; நடந்தது என்ன?
புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈருபட்டுள்ளனர்.
சம்பவத்தில் மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் குழப்பம்
உயிரிழந்த வயோதிப பெண் தனது வீட்டினுள் கைகால்கள் கட்டப்பட்டு, ஆடைகளின்றி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் , பிள்ளைகள் எப்போதாவது தம்மைப் பார்க்க வருவதாகவும் தெரியவந்துள்ளது.
வீட்டின் படுக்கையில் கைகளையும் கால்களையும் கட்டி ஏதோ ஒரு வழியில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடலில் வெட்டுக்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வயோதிப பெண்ணிடம் அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
நடந்தது என்ன? மோப்ப நாய் வரவழைப்பு
நேற்று பிற்பகல் 3 மணியளவில் வயோதிப பெண்ணின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்த நிலையில் அவரை தேடியுள்ளனர். பின்னர், வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் பார்த்த போது அந்த வயோதிப பெண் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி அந்த வயோதிப பெண்ணின் மகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் பொலிஸ் அவசர பிரிவினருக்கும், மதுரங்குளி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பிரிவு பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் மூன்று ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். சம்பவம் இடம்பெற்ற இரவு வயோதிப பெண் தனது மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு வரும் முன்னர் சந்தேக நபர்கள் இவ்வாறு வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதோடு பொலிஸ் மோப்ப நாயும் அழைத்துவரப்பட்டு பெண் தங்கியிருந்த வீடு மற்றும் வளவு என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி, சடலத்தை பார்வையிட்டு, சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நல்லாந்தளுவ பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.