யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த தாயின் சங்கிலியை அறுத்தவர் சிக்கினர்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆம் திகதி சங்கிலி அறுத்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த 4 ஆம் திகதி அராலி வீதியால் யாழ்ப்பாணத்தை நோக்கி தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைக் கீழே தள்ளி வைத்துவிட்டு தாய் அணிந்திருந்த சங்கிலியை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் தெல்லிப்பழையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றில் வேலை செய்வதாகவும் திருத்துவதற்காக விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையே குறித்த சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அராலியில் அறுத்த சங்கிலி மானிப்பாயைச் சேர்ந்த மற்றைய நபரிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் இவர் ஏற்கனவே பல சங்கிலி அறுப்பு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எனினும் இந்த நிலையில் மற்றைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக வட்டுக்கோட்டை பொலிசார் வலைவீசி வருகின்றனர்.