பிள்ளைகள் கண் முன்னே தீயில் கருகிய தாய் ; அதிகாலையில் வர்த்தகர் நிகழ்த்திய கொடூரம்
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் மீது, ஞாயிற்றுக்கிழமை (07) அன்று அதிகாலை அவரது கணவனால் தீவைக்கப்பட்டதை அடுத்து, பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பிபில, கொடிகமுவ கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

கணவன் தலைமறைவு
அவர் தனது பிள்ளைகள் மற்றும் கணவனுடன் இரவு உணவை உட்கொண்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளதுடன், பிள்ளைகள் தனியான அறையொன்றில் உறங்கியுள்ளனர்.
அவ்வாறான நிலையில், அதிகாலை வேளையில் அறையொன்றில் தீப்பிடித்து எரிவதைக் கண்ட பிள்ளைகள், கதவைத் திறந்து பார்த்தபோது தாய் தீப்பற்றி எரிவதைக் கவனித்துள்ளனர்.
உடனே தீயை அணைத்து, அவரை பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பு ; விஜய் ராஜினாமா செய்த தொகுதியில் ராகவா லோரன்ஸ்? நடிகர் வெளியிடவுள்ள அறிவிப்பு
பெண்ணின் மீது தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் அவரது கணவன், தற்போது இப்பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
அவர் கோழி இறைச்சிக் கடையொன்றை நடத்தி வரும் ஒரு வர்த்தகராவார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதாலேயே இந்தக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மரணம் தொடர்பிலான நீதவான் விசாரணை நடத்தப்படவிருந்ததுடன், பிரேதப் பரிசோதனை பிபில ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவிருந்தது.
மெதகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.