பிறந்து ஏழு நாட்களேயான இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது
பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (2023.12.08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த குழந்தைகள் தலா 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 29 வயதுடைய தாயும் ஏனைய இரண்டு பெண்களும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, ராகம, நாரங்கொடபாலுவ விகாரை மாவத்தையில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது, புதிதாகப் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், குழந்தையின் தாயிடமிருந்து குழந்தை சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளப்பட்டமை தெரியவந்தது.
கொழும்பு காசல் வைத்தியசாலை
இந்த குழந்தையுடன் உடன்பிறந்த இரட்டை சகோதரன் பொலன்னறுவையில் வசிக்கும் மற்றுமொரு பெண்ணுக்கு 25,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இந்த குழந்தைகளின் தாயார் கொழும்பு காசல் வைத்தியசாலையில் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குழந்தைகளின் தாயும் அவர்களை விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இரண்டு குழந்தைகளும் தற்போது தாயுடன் ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளனர்.