யாழில் மகளை துன்புறுத்திய தாய் ; பொலிஸார் அதிரடி
யாழ்ப்பாணத்தில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயாரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தாயார் தனது மூத்த மகளை அடித்து துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உயிரை மாய்க்க போவதாக சிறுமி தகவல்
இதனையடுத்து மகளை அடித்து துன்புறுத்த கூடாது என தாய்க்கு பொலிஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (11) இரவு , தாய் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் , அதனால் தான் உயிரை மாய்க்க போவதாகவும் மகள் தனது தந்தையின் சகோதரிகளுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து , தந்தையின் சகோதரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாருடன் சென்று மகளை மீட்டு வந்துள்ளனர்.
பின்னர் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (12) தாயாரை கைது செய்த பொலிஸார் மகளையும் , தாயையும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்தி இருந்தனர்.
இதன்போது , மகளை சட்டவைத்திய அதிகாரி முன்பாக முற்படுத்தி வைத்திய அறிக்கையை பெற பொலிஸாருக்கு உத்தரவிட்ட மன்று , தாயாரை பிணையில் செல்ல அனுமதித்தது.