பிரதமர் ஹரிணியின் ஒருங்கிணைப்பு உதவியாளராக மொஹமட் றியாட் ஷம்மி! யார் இவர்?
இலங்கையின் அரசியல் மேடையை தலைகீழாக புரட்டிப் போட்ட பல மாற்றங்கள் தொடரந்தும் நிகழ்ந்து வரும் நிலையில் புரட்சிகர மாற்றங்களை தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தி வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையிலான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இன்றையதினம் (18-11-2024) ஜனாதாபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறை அமைச்சுப் பதவிக்கான அமைச்சராகவும் இன்று அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பிரதமராக நியமனம் பெற்றதையடுத்து அவர் சமூகத்தின் ஒரு முக்கிய பேசு பொருளாக மாறியதுடன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனைப் பெண்ணாகவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.
இந்த ஆக்கம் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களைப் பற்றியதல்ல. மாறாக இக்கட்டான கரடுமுரடான பாதையில் பயணித்து கல்வித் தகைமைகளால் தன்னைத் தயார் செய்து கொண்டு பிரதமர் ஹரினி அமரசூரியவின் ஒருங்கிணைப்பு உதவியாளராக கடமை புரிகின்ற கலகெதரயைச் சேர்ந்த மொஹமட் றியாட் ஷம்மி நதீஷா பற்றியதாகும்.
கண்டி, கலகெதரயைச் சேர்ந்த மொஹமட் காலித் மொஹமட் றியாட் மற்றும் பாதிமா றிஸானா தம்பதியினரின் புதல்வியாக ஷம்மி நதீஷா 1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்துள்ளார்.
தந்தை மொஹமட் றியாட் சிறந்த ஒரு கல்விப் பின்புலத்துடன் இலங்கை இரானுவ சேவையில் இணைந்து சேவை செய்தாலும் பிற்பட்ட சில குடும்ப சிக்கல்கள், சூழ்நிலைகள் காரணமாக குறித்த சேவையிலிருந்து இடைவிலகி சாதாரண ஒரு கூலித் தொழிலாளியாக நான்கு பேர் கொண்ட இந்த குடும்பத்தை போஷித்துள்ளதோடு தனது இரண்டு பிள்ளைகளுக்கும் முறையான கல்வியை பெற்றுக்கொடுப்பதில் அபார கவணம் செலுத்தியுள்ளார்.
இதனடிப்டையில் அவரது புதல்வியான மொஹமட் றியாட் ஷம்மி கண்டி Springfield மற்றும் Green Hill ஆகிய சர்வதேச பாடசாலைகளில் ஆரம்ப மற்றும் உயர்தர கற்கைகளைப் பெற்றுக்கொண்டதுடன் சட்டத்துறையில் தான் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக சட்டத்துறையில் தனது உயர் கற்கைகளைத் தொடர்ந்துள்ளார்.
மேற்படி கற்கை நடவடிக்கைகளில் சிறப்பாக கவனம் செலுத்தியமொஹமட் றியாட் ஷம்மி நதீஷா இங்கிலாந்தின் Wolverhampton பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சட்ட இளங்கலை (LLB) பட்டத்தை மிக உயரந்த அடைவுகளுடன் (2nd Class Upper Division) பெற்றுக்கொண்டதுடன் தற்போது கொழும்பு பல்லைக்கழகத்தில் சட்டத்துறையில் தனது முதுதத்துவமாணி (M phill) மற்றும் (Phd) கற்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
மேற்படி கல்வி மற்றும் ஆளுமைத் தகமைகளுடன் தன்னை தகவமைத்துக் கொண்ட மொஹமட் றியாட் ஷம்மி தற்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் (பிரதமரின்) ஒருங்கிணைப்பு உதவியாளராக கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.