இலங்கைக்கு மோடி போகக்கூடாது; மாநிலங்களவையில் ஒலித்த கோஷம்
இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ, “கடந்த 40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஜனவரி 25 அன்று 3 படகுகளில் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பெப்ரவரி மாதத்தில் ஏராளமான மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகையும் பறிமுதல் செய்தது. நமது மீன்படி தொழிலை அழிக்க இலங்கை கடற்படை விரும்புகிறது.
தற்போது என்ன காரணத்துக்காக நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார்? இலங்கை அரசுக்கும் அதன் கடற்படைக்கும் கண்டனம் தெரிவிக்கப் போகிறாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.