அமெரிக்காவில் விமானத்தில் இருந்து குடையுடன் இறங்கிய மோடி!
நான்கு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவின் வாஷிங்டன் சென்றடைந்தபோது மழை தூறியதால், பிரதமர் குடை பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இந்திய நேரப்படி அதிகாலை 4 மணியளவில், பிரதமர் மோடி வாஷிங்டன் சென்றடைந்த போது மழை தூறியதால், பிரதமர் குடை பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கினார்.
இதனைதொடர்ந்து காரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு காத்திருந்த இந்தியர்களை கண்டவுடன் வாகனத்திலிருந்து இறங்கிவந்து அவர்களிடம் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன்போது கொட்டும் மழையில் கையில் தேசியக்கொடி ஏந்தி இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார். இதையடுத்து, அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸூடனும் சந்திப்பு நடக்கிறது.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுக்கான வாய்ப்புகள், குறிப்பாக, அறிவியல், தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
மேலும் நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி , குவாட் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளதுடன் , நியூயார்க்கில் இடம்பெறும் ஐநா பொது சபைக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளார்.