தமிழர் பகுதியில் புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மனித அபிவிருத்தி தாபனம், நிந்தவூர் பிரதேச செயலகத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர், சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இந்த சேவையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ், கல்முனை சட்ட உதவி ஆணைக்குழு சட்ட உத்தியோகத்தர் வீ.ரீ. ஹசீனா, நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால், மேலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அம்பாறை மாவட்டக் காரியாலய அதிகாரிகள் உட்பட பல்வேறு அரசுத்துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், வெளிநாட்டுப் பணி பெற்றுக்கொள்வதில் இருக்கக்கூடிய சிக்கல்கள், மோசடி தவிர்ப்பது, நியாயமான ஊதியம் பெறல் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதோடு, முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்களும் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய நடமாடும் சேவைகள், பாதுகாப்பான புலம்பெயர் தொழிலுக்கு வழிகாட்டும் ஒரு முக்கியமான முயற்சியாக கருதப்படுகின்றன.
பொதுமக்கள் இதற்குப் பெரும் வரவேற்பு அளித்ததாகவும், எதிர்காலத்தில் மேலும் பல சேவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.