நாமலை ராஜபக்சவை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று (14) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கட்சியின் பிற முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய விடயங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச, இலங்கை-அமெரிக்க உறவை வலுப்படுத்தவும், இணைந்த பணிகளை மேம்படுத்தவும் SLPP அர்ப்பணிப்புடன் செயல்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்கா தலையிடாத வெளிநோக்குக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும், அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படும் விதத்தில் அதிக வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) USAID நிதியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைக் கண்காணிக்க ஒரு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற SLPP முன்மொழிவைப் பற்றியும் அமெரிக்க தூதுவரிடம் விளக்கமளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அமெரிக்க தூதுவருடன் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பு, இலங்கை அரசியலில் சில புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.