சவுதி அரேபியா அருகே சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்; UKMTO வெளியிட்ட அதிரடித் தகவல்!
சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா (Ras Tanura) கடற்பரப்பிற்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சரக்குக் கப்பல் (Container Vessel) பயணித்துக்கொண்டிருந்த போது, அதற்கு மிக அருகாமையில் இரண்டு "தெரியாத ஏவுகணைகள் அல்லது பொருட்கள்" (Unknown projectiles) தண்ணீரில் வந்து விழுந்ததாகக் கப்பல் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தாக்குதல் முயற்சிகளும் சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

இதனால் அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் ஏனைய கப்பல்களுக்கும் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், கப்பலிலிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலுக்கும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.