அரச அதிகாரிகளின் இடமாற்றங்கள் குறித்து அமைச்சு விடுத்துள்ள உத்தரவு
பொதுச் சேவைகள் அதிகாரிகள் தொடர்பான வருடாந்த இடமாற்றத் தீர்மானங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்ற உத்தரவுகள் இறுதி செய்யப்பட்ட பின்னர், அவற்றை நிறுத்தி வைக்கவோ, திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது பிற்போடவோ முடியாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றங்கள் தொடர்பான ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது மேன்முறையீடுகள் காணப்படின், அவை பரிந்துரைக்கப்பட்ட ஒன்லைன் (Online) முறைமையூடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் மறு ஆய்வுக் குழுக்கள், அரசாங்க சேவை ஆணைக்குழு அல்லது நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவற்றின் ஊடாக பரிசீலிக்கப்படும்.
இதேவேளை மேன்முறையீடுகள் பரிசீலனையில் இருக்கும் காலப்பகுதியிலும் கூட, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் தடையின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
திட்டமிடப்பட்ட திகதியில் எவ்வித விதிவிலக்குகளுமின்றி இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதை நிறுவனங்களின் தலைவர்கள் (Heads of Institutions) உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையின் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.