இலங்கையில் 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் ; அமைச்சர் ஆனந்த விஜேபால
இலங்கையில் தற்போது 48 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் மேலும் 48 குழுக்கள் செயலற்ற நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்கள்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது 48 பாதாள உலகக் குழுக்கள் தொடர்ந்தும் தீவிரமாக இயங்கி வருகின்றன மேலும் 48 குழுக்கள் முடக்கப்பட்டு செயலற்றதாகியுள்ளன.
செயலில் உள்ள மற்றும் செயலிழந்த குழுக்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கும் அதிகமான உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்படாவிட்டால் கைது செய்யப்படும் குற்றவாளிகள் நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள்.
இந்த பாராளுமன்றம் மக்களுக்கு எதிரான மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக இல்லை. அதன் மூலம் எந்தவொரு ஜனநாயக வழிமுறையும் சீர்க்குலைக்கப்படாது என்றும் மேலும் சுட்டிக்காட்டினார்.