எரிபொருள் விலை உயர்வுக்கான காரணத்தை வெளியிட்ட அமைச்சர்
எரிபொருட்களின் விலையை உயர்த்தாவிட்டிருந்தால், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிக்கும் என எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார். இதன்போது மைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
20 வீதமளவில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை
நாட்டில் கடந்த மே, ஜுன் மாதங்களில் 80- 85 அமெரிக்க டொலராக இருந்த கச்சா எண்ணெய் பீப்பாயின் விலை, ஜுலை மாதத்தில் அதிகரித்தது.
ஒகஸ்ட் மாதத்தில் 100- 110 டொலராக இது மேலும் அதிகரித்து சுமார் 20 வீதமளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த காரணத்தினாலேயே எமக்கும் எரிபொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எரிபொருட்களின் விலையை உயர்த்துவது என்பது அரசாங்கம் என்ற ரீதியில் நாம் விரும்பாத ஒரு விடயமாகும். எனினும், இதனை மேற்கொள்ளாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.
எரிபொருளை தட்டுப்பாடின்றி, சந்தைக்கு விநியோகிக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது. இதனால், எரிபொருள் சந்தைக்கு நாம் புதிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
150 சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையம்
அதற்கிணங்க, தற்போது சினோபெக் நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கையை நாட்டில் ஆரம்பித்துள்ளது.
அதேவேளை செப்டம்பர் 25 ஆம் திகதிக்குள் நாடளாவிய ரீதியாக 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை உருவாக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அதேபோல், ஆர்.எம்.பாக்ஸ், செல், யுனைட்டட் நிறுவனங்களும் ஒக்டோபர் மாதமளவில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.
இவை இவ்வருட இறுதிக்குள் விநியோகத்தை ஆரம்பிக்கும்.
அதேநேரம், இன்று முதல் கியு.ஆர். முறைமை இல்லாமல் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்த அவர், ஆனால், கலன்களிலோ போத்தல்களிலோ எரிபொருளை பெற்றுக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.