ஞானசார தேரருக்கு நன்றி கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
நாட்டில் இன்னொரு தீவிரவாத தாக்குதல் எவ்வேளையிலும் இடம்பெறலாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்நிலையில் முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கும் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய சரத்வீரசேகர, குரானின் சட்டங்களை அடிப்படையாக கொண்டதே ஐஎஸ் அமைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
ஞானசாரர் இந்த தகவலை பகிரங்கப்படுத்தியமைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம் . ஐஎஸ் கொள்கை உயிர்ப்புடன் இருக்கும்வரை இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்றே பௌத்த மதகுரு தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தகொள்கையை பின்பற்றும் எந்த இளைஞனும் எந்தவேளையிலும் தாக்குதல் நடத்தலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வஹாபிசம் என்பது குரானை அடிப்படையாக கொண்டது, அது சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இஸ்லாமிய மதத்திற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அமைச்சர் சரத் வீரசேகர எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.