இறக்குமதி நிலக்கரி தரத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமைச்சர் லால் காந்த
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கின்றது என்று அமைச்சர் கே.டீ.லால் காந்த இன்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், இந்த நிலக்கரி விநியோக டெண்டர் நடைமுறையில் எவ்வித மோசடியும் அல்லது ஊழலும் இடம்பெறவில்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களிடம் முன்பாகப் பேசிய அமைச்சர், இது தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் வெறும் ஆதாரமற்ற வதந்திகளே என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "தரமற்ற நிலக்கரி விநியோகிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையானது. அதில் மாற்றுக்கருத்து இல்லை. தரக்குறைபாடு ஏற்பட்டிருந்தாலும், அந்தப் டெண்டர் வழங்கப்பட்ட விதத்தில் முறைகேடுகளோ அல்லது ஊழலோ இடம்பெறவில்லை.
தரமற்ற நிலக்கரியால் அரசுக்கு ஏற்படும் நட்டத்தை அறவிடுவதற்கு முறையான பொறிமுறையும் அளவுகோல்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அந்த விதிகளின்படி உரிய இழப்பீடு வசூலிக்கப்படும்.
கடந்த கால அரசுகளைப் போல் அமைச்சரவை தீர்மானங்களின் ஊடாக தன்னிச்சையாக விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்யாமல், தற்போது மிகவும் வெளிப்படையான விலைமனு கோரல் நடைமுறைகளையே அரசு பின்பற்றி வருகின்றது என்றார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்காகக் கொண்டுவரப்பட்ட நிலக்கரி நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விட குறைவாக இருப்பதாக அண்மைய நாட்களில் பெரும் சர்ச்சை எழுந்திருந்தது.
இதனால் மின் உற்பத்தித் திறன் குறைவதாகவும், இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.
அமைச்சர் கே.டீ.லால் காந்தவின் மேற்படி கருத்து, தொழில்நுட்ப ரீதியான தவறுகளை ஒப்புக்கொண்டாலும், அரசியல் ரீதியான ஊழல் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.