இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி கைது ; நீடிக்கப்பட்ட தடை உத்தரவு
முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கைதுசெய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் 29ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
குறித்த அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும், அதற்கான மறுப்பு ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் தரப்பினர்களுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த மனுவை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.