மத்திய கிழக்கு போர்ச் சூழல் ; ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்தியக் கப்பல்கள்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியிலும், எரிவாயு ஏற்றிய இரண்டு இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில், 'ஷிவாலிக்' (Shivalik) மற்றும் 'நந்தா தேவி' (Nanda Devi) ஆகிய இரண்டு இந்தியக் கப்பல்களும் அந்தப் பகுதியைக் கடந்து தற்போது இந்தியத் துறைமுகங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

இவ்விரு கப்பல்களிலும் தலா 46,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான எல்பிஜி (LPG) எரிவாயு உள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 93,000 மெட்ரிக் தொன் எரிவாயு இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்படலாம் என அஞ்சப்பட்டது.
இவ்வாறான இக்கட்டான சூழலிலும் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தக் கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.