வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸுக்கும் இடையில் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெற்ற இந்த சந்திப்பு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81ஆவது அமர்வை முன்னிட்டு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம், அத்துடன் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு இலங்கை வழங்கி வரும் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் வகையில் சர்வதேச நிதிக் கட்டமைப்பை மறுசீரமைப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் தகவலின்படி, ஐ.நா. பொதுச் செயலாளருடனான இந்த சந்திப்பு சுமூகமான முறையில் நிறைவடைந்துள்ளது.