வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம் ; கல்முனை மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கிழக்கு மாகாணம் ஆயுள் வேத திணைக்களத்தினால் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு நியமனம் வழங்கப்படவுள்ள ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்திற்கு தடை உத்தரவினை கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் பிறப்பித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விடயத்தை தடுத்து நிறுத்துகின்ற வகையில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இம்மனு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

குறித்த நேர்முகப்பரீட்சை மற்றும் நியமனத்தால் பாதிக்கப்பட்ட பிரதிவாதியான வைத்தியர் தனக்கு எதிரான அநீதியை கேள்விக்குட்படுத்தி சட்டத்தரணி ஐ.எல்.எம். றமீஸ் ஊடாக கல்முனை மேல் நீதிமன்றம் ஊடாக ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் இம்மனுவில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜெ. லியாகத் அலி உட்பட 14 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு உள்ளார்.
மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதிபதி மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டதுடன் ஆயுள் வேத வைத்தியசாலைகளுக்கான வைத்திய அத்தியட்சகர் பதவி நியமனத்தினை இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் பிரதிவாதிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆந் திகதி ஆஜராக வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார்.
மனுதாரரின் வழக்கினை ஆதரித்து சட்டத்தரணிகளான கலாநிதி ஏ.எல்.ஏ கபூர் தலைமையில் ஐ .எல்.எம் றமீஸ், எம்.எம்.எம்.முபீன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
கடந்த 12.08.2025 ஆயுள் வேத திணைக்களத்தினால் வைத்திய அத்தியட்சகரை தெரிவு செய்வதற்கு குறித்த நேர்முக பரீட்சை நடாத்தப்பட்டிருந்தது.
இதன்போது மனுதாரர் நேர்முக பரீட்சை மற்றும் பதவி நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அங்கு வழங்கப்பட்ட புள்ளிகள் விடயத்திலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் நேர்முக பரீட்சையின் போது மதிப்பெண் வழங்கப்பட்ட மதிப்பெண் தாளில் உரிய தகைமை நிலையில் இருந்த சிரேஸ்டத்திற்கு உரிய மதிப்பெண் வழங்காமல் தகைமையற்ற நிலையில் இருந்தவருக்கு மோசடியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        