பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையைத் தடை செய்ய நடவடிக்கை
இலங்கையில் பொதியிடப்படாத நிலையில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (கோப் குழு) உப குழு முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது தேங்காய் எண்ணெய் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்றை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் தேங்காய் எண்ணெயை பொதியிட்டு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படுவதன் காரணமாகவே அதிகளவில் கலப்படம் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதியிடப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படும்போது அதன் உற்பத்தி மற்றும் தரம் தொடர்பான தகவல்களைத் தெளிவாக அடையாளம் காண முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் குறிப்பிட்ட தேங்காய் எண்ணெய் எந்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது, எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, அது முறையாக சுத்திகரிக்கப்பட்டதா அல்லது கலப்படம் செய்யப்பட்டதா என்பதைத் தெளிவாகக் கண்டறிவதில் சிரமம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டால், தேங்காய் எண்ணெய் பொதிகளில் தயாரிப்பின் பெயர், நிறை, விலை, காலாவதியாகும் திகதி, தொகுதி இலக்கம் மற்றும் உற்பத்தியாளரின் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கட்டாயமாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் உற்பத்தியாளர் மற்றும் அதன் தரம் உள்ளிட்ட விடயங்களை நுகர்வோர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேங்காய் எண்ணெயில் இடம்பெறும்தாகக் கூறப்படும் கலப்படம் மற்றும் அது தொடர்பான நுகர்வோர் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.