உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு ; குற்றவாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்பட்ட தண்டனை விபரங்கள்
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கும் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற Trial-at-Bar மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நீண்டகால கடூழிய சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது.
இதன்படி, குற்றவாளிகளுக்கு 200 ஆண்டுகள் முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை விவரங்களின்படி, ஐந்து குற்றவாளிகளுக்கு தலா 200 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகளும், நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு 260 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 24 பேர் மீது 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், 15 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய 9 பேரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விபரம்
1ஆம் பிரதிவாதி – மொஹமட் நௌபர் மௌலவி: 220 ஆண்டுகள்
2ஆம் பிரதிவாதி – மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பே (கபூர் மாமா): 240 ஆண்டுகள்
3ஆம் பிரதிவாதி – ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான்: 240 ஆண்டுகள்
4ஆம் பிரதிவாதி – மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா: 240 ஆண்டுகள்
5ஆம் பிரதிவாதி – மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக்: 240 ஆண்டுகள்
6ஆம் பிரதிவாதி – மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்: 200 ஆண்டுகள்
7ஆம் பிரதிவாதி – மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்: 200 ஆண்டுகள்
8ஆம் பிரதிவாதி – அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்: 260 ஆண்டுகள்
9ஆம் பிரதிவாதி – மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்: 220 ஆண்டுகள்
10ஆம் பிரதிவாதி – அப்துல் லதீஃப் மொஹமட் சாஃபி: 220 ஆண்டுகள்
11ஆம் பிரதிவாதி – ஹுசைனுல் ரிஸ்வி காலித் சமீர்: 200 ஆண்டுகள்
15ஆம் பிரதிவாதி – மொஹமது ஹனீஃபா செய்னுல் ஆப்தீன்: 200 ஆண்டுகள்
16ஆம் பிரதிவாதி – மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்: 220 ஆண்டுகள்
18ஆம் பிரதிவாதி – ராசிக் ரசா ஹுசைன்: 220 ஆண்டுகள்
19ஆம் பிரதிவாதி – கச்சி மொஹமட் மொஹமட் ஜெம்சித்: 200 ஆண்டுகள் 2019 ஏப்ரல்
21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன.
இந்த வழக்கில் கொலை, சதி, தாக்குதல்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பு சார்பில் 2,309 சாட்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.
இரு தரப்பினரின் சாட்சியப் பதிவுகளும் 2026 ஆகஸ்ட் 24ஆம் திகதி நிறைவடைந்திருந்த நிலையில், செப்டம்பர் 22ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்மூலம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முக்கிய கட்டம் நிறைவடைந்துள்ளது.