திருடர்களிடமிருந்து புகையிரதம் தொழிற்சாலையை பாதுகாக்க அமைச்சர் அதிரடி நடவடிக்கை
திருடர்களிடமிருந்து இரத்மலானையில் அமைந்துள்ள புகையிரதம் தொழிற்சாலையை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) முன்னெடுத்துள்ளார்.
இந்த நிலையில், போக்குவரத்து மற்றும் வெகுசனத் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரத்மலானையில் அமைந்துள்ள புகையிரதம் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது அதற்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் மிகப் பெரும் அரச தொழிற்சாலையான புகையிரதம் தொழிற்சாலையில் ரயில்களின் திருத்தப் பணிகள், எஞ்சின் பராமரிப்புப் பணிகள், தொடருந்து பெட்டிகள் தயாரிப்பு, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் உள்ளிட்ட ஏராளம் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தத் தொழிற்சாலை பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ளதன் காரணமாக அங்குள்ள பாதுகாவலர்களால் மொத்த தொழிற்சாலைக்கும் உரிய முறையில் பாதுகாப்பு வழங்க முடியாதுள்ளது.
இதன் காரணமாக திருடர்கள் மற்றும் போதைக்கு அடிமையானோர் இந்தத் தொழிற்சாலையின் உதிரிப்பாகங்களை திருடிச் சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து அரசாங்கத்துக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
ஆகவே அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பொலிஸாரின் ரோந்து மற்றும் காவல் பணிகளை அதிகரிக்கவும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.