கடத்தல் வழக்கில் ஆவா கும்பலுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர் அதிரடி கைது!
கொழும்பு - மட்டக்குளிய பிரதேசத்தில் நேற்றிரவு (16-11-2024) கடத்தல் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடைய புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, எச்சிலம்பற்று மற்றும் தோபூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் எச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் வசிக்கும் இருவர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல 'ஆவா குரூப்' குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டுபாயில் வசிக்கும் நபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு ஆவா குழு உறுப்பினர்கள் இருவரையும் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
‘டிக்டாக்’ என்ற சமூக ஊடக தளம் ஊடாக ‘ஆவா குழு’ உறுப்பினர்கள் இதற்கு முன்னர் துபாயைச் சேர்ந்த ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் ஒரு பெண் மூலம் கும்பல் உறுப்பினர்களை மட்டக்குளிக்கு இழுக்கும் திட்டத்தைத் திட்டமிட்டனர், பின்னர் அவர்கள் தாக்கப்பட்டு, படம்பிடிக்கப்பட்டு, காட்சிகள் டுபாயில் உள்ள நபருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.