மக்கள் தங்கள் உயிர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் - சிறிசேன
அரசாங்கம் மருத்துவநிபுணர்களின் ஆலேசானைகளை செவிமடுக்கவேண்டும் நெகிழ்ச்சி தன்மையுடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் பெருந்தொற்று நிலைமை குறித்து உள்ளுர் மருத்துவ நிபுணர்களினது எதிர்வுகூறல்கள் மற்றும் பரிந்துரைகளையும் வெளிநாட்டு நிபுணர்களினது கருத்துக்களையும் அரசாங்கம் செவிமடுக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் நோயாளர்கள் எண்ணிக்கை மரணங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாங்கள் இந்த விடயத்தில் அனைவரையும் செவிமடுக்கவேண்டும் நெகிழ்ச்சிதன்மையுடன் செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து தற்போது பெரும் உதவிகளை விட அதிக உதவியை பெறவேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைiயை எதிர்கொள்வதற்கு அரசாங்கமும் எதிர்கட்சிகளும் இணைந்த பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவேண்டும் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் உயிர்கள் குறித்த நம்பிக்கையை இழந்துள்ளனர்,தற்போதைய நிலை காரணமாக மனச்சோர்வடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள சிறிசேனமக்களின் மனோநிலையை உயர்த்தி அவர்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான பொறிமுறை அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.