உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி ; போலி தகவல்!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி செய்தியொன்று பரவி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான செய்திகளை கடுமையாக மறுப்பதாகவும், அது உண்மைக்குப் புறம்பானது எனவும், பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளது.
போலியான செய்தி பரப்பிய நபர்கள் குறித்து விசாரணை
இந்தச் செய்தி தொடர்பான உண்மை தகவல்களை அளித்த ரவி செனவிரத்ன, பாராளுமன்ற உயர் மட்டக் குழுவின் அழைப்பாணையை தொடர்ந்து, நேற்று புதன்கிழமை 08 அன்று அக்குழுவின் முன் ஆஜராகி எழுப்பப்பட்ட கோள்விகளுக்கு பதில்களை வழங்கியதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக தாம் கூறவில்லை என்றும் வலியுறுத்தினார்.
இவ்வாறான, போலியான செய்திகளைப் பரப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.