உடவலவ நீர்த்தேக்கத்தில் பாரிய மீன் அறுவடை
இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடவலவ நீர்த்தேக்கத்தில் கடந்த மே 09 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் 35,000 கிலோகிராமிற்கும் அதிகமான (35,469 kg) பாரிய மீன் அறுவடை கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) அறிவித்துள்ளது.
அறுவடை செய்யப்பட்ட இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே ஒன்பது இலட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்று தொண்ணூற்று மூன்று ரூபா (ரூபா 10,909,393/=) ஆகும்.

பிரதான காரணம்
பலங்கொடை உள்ளிட்ட உடவலவ நீர்த்தேக்கத்தின் மேல் நீரேந்துப் பகுதிகளில் பெய்த கடும் மழையினால் வலவே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தமையே இந்தச் சாதனை அளவிலான அறுவடைக்கு பிரதான காரணமாகும்.
இதில் கட்லா (Catla) 27,030 kg, மிரிகால் (Mrigal) 7,430 kg மற்றும் திலாப்பியா (Tilapia) 1,009 kg ஆகிய மீன் வகைகள் அடங்குகின்றன. அறுவடை செய்யப்பட்ட மீன்களில் கணிசமான அளவு கருவாடு உற்பத்திக்காக நீர்கொழும்பு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த 313 மீனவர்கள் நேரடி பொருளாதார நன்மைகளைப் பெற்றுள்ளதுடன், சுமார் 1,650 பேர் மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்... வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ; பூரிப்பில் செய்த செயல்
குறைந்த விலையில் தரமான மற்றும் புதிய நன்னீர் மீன்களை நுகர்வோரால் பெற்றுக்கொள்ள முடிவதுடன், பிரதேச மக்களின் புரதத் தேவையினைப் பூர்த்தி செய்யவும் இது பெரும் பக்கபலமாக அமைந்தது.
நன்னீர் மீன்பிடித்துறையை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், இவ்வருடத்தில் மொத்தமாக 24 இலட்சம் நன்னீர் மீன் குஞ்சுகளை உடவலவ நீர்த்தேக்கத்தில் விடுவதற்கு தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
நாட்டின் நன்னீர் மீன்பிடித்துறையை வலுப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஊட்டச்சத்து மட்டத்தையும் மேம்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் என அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.