இலங்கையில் பாரிய சத்தத்துடன் ஏற்பட்ட நிலஅதிர்வு; மக்கள் மத்தியில் அச்சம்
இரத்தினபுரியில் பாரிய சத்தம் கேட்டதுடன், நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கஹவத்தை நகரத்திற்கு அருகில் கஹவத்துகந்த பிரதேசத்தில் பாரிய சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டமையினால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் திடீரென பாரிய சத்தம் கேட்டதாக பெல்மடுல்லை பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய துறைசார் அதிகாரிகள் நேற்று கஹாவத்தைக்கு சென்றுள்ளதாக பெல்மடுல்ல பிரதேச செயலாளர் ஏ.எம்.ருவன்சிறி தெரிவித்துள்ளார்.
இதனை கஹவத்தை நகரத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் கஹவத்தை ஓபநாயக்க பழைய ரயில் வீதிக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மின்சார ட்ரான்ஸ்போமர்கள் வெடிப்பது போன்ற பாரிய சத்தம் கேட்டதாகவும், பூமி அதிர்ந்ததாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் உடனடி பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் கப்பில் தஹநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை வே கங்கை இந்த பிரதேசம் ஊடாக செல்வதனால் பல வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவு மீண்டும் ஏற்படும் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இந்த அதிர்வினால் வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.