வெளிநாட்டிலிருந்து விபச்சார அழகிகளை வருவித்த மசாஜ் நிலையம்; 15 ஆண்டுகள் கடூழிய சிறை!
இந்தோனேசியாவிலிருந்து மூன்று இளம் பெண்களை சிகிச்சை நிபுணர்கள் தொழிலுக்காக அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதற்காக மசாஜ் நிலைய உரிமையாளருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அதோடு இந்த தண்டனையை 5 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்று இன்று (24) உத்தரவிட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கடுமையான குற்றம்
பாதிக்கப்பட்ட மூன்று இளம் பெண்களுக்கும் தலா இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இழப்பீடு வழங்கப்படாவிட்டால், மேலதிகமாக ஒரு வருடம் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சட்டமா அதிபர் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதேவேளை பிரதிவாதிக்கு மென்மையான தண்டனை விதிக்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரியபோது, பிரதிவாதி நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கடுமையான குற்றத்தைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அத்தகைய நபர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.