சமுத்திர கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் நாட்டை பாதிக்காது
இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே முறையான நட்புறவைப் பேணுவதற்கும் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் மட்டுமே கையெழுத்திடப்படும்.
தேசிய சொத்துக்களை விற்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள 3 உடன்படிக்கைகள் தொடர்பில் மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்க்கும் உடனடியாக அறிவிக்குமாறு எல்லே குணவன்ச தேரர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் எல்லே குணவன்ச தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, அவ்வாறான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால் அது தொடர்பில் நாடாளுமன்றத்திற்க்கு அறிவிக்கப்படும். இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை பேணவும், பாதுகாப்பு தொடர்பான பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தவும் மட்டுமே இந்த ஒப்பந்தங்கள் முறையாக கையெழுத்திடப்படும்.
மேலும், தேசிய சொத்துக்களை விற்பதில் சிக்கல் இருக்காது. மாறாக, அவ்வாறான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தியாவிடம் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்னும் நாட்டுக்கு வெளியிடப்படவில்லை என எல்லே குணவன்ச தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் திடீர் வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு சிறிய தொகைக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களில் தேசிய வளங்களை திட்டமிட்டு சூறையாடும் சதிகள் சகிக்க முடியாதவை என எல்லே குணவன்ச தேரர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.